2020ஆம் ஆண்டில் மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் மைத்திரி!

Report Print Rakesh in அரசியல்

2020 இல் மஹிந்தவைப் பிரதமராக்கும் நோக்கோடுதான் மைத்திரிபால அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசில் உள்ள சிலர் புரியும் ஊழலால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேசிய அரசில் சுதந்திரக் கட்சி இணைந்துள்ள போதிலும், எமது கட்சி எந்தவோர் ஊழலிலும் ஈடுபடவில்லை. இவற்றையெல்லாம் செய்வது ஐக்கிய தேசியக் கட்சிதான்.

மத்திய வங்கி ஊழல் எமது தேசிய அரசுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. இந்தச் சவால்களை முறியடித்துக்கொண்டு அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இலக்காக இருக்க வேண்டும். இதற்குத் தடையாக இருப்பவர்கள் நீக்கப்பட்ட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவை செயலாளராக வைத்துக்கொண்டு கட்சியை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்த முடியாது. அவரை அந்தப் பதவியில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அதுதான் கட்சித் தலைவர் மைத்திரிபால செய்ய வேண்டிய முதல் வேலை.

அடுத்ததாக எதிர்வரும் தேர்தலில் மஹிந்த அணியின் ஆதரவை மைத்திரி பெற வேண்டும். அவர்களை ஒன்றிணைத்துக்கொண்டு செல்ல வேண்டும். 2020 இல் மஹிந்தவைப் பிரதமராக்கும் நோக்கோடுதான் மைத்திரிபால அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இதற்கு மஹிந்த தரப்பில் தடையாக இருப்பவர்கள் நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, பஸில் ராஜபக்ஷ மற்றும் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்களை மஹிந்த கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் இரண்டு தரப்பும் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நிறுவ முடியும் என குறிப்பிட்டிருந்தார்.