வடகொரியா விவகாரம்! ஐ.நாவில் மைத்திரிக்கு காத்திருக்கும் சிக்கல்?

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பில் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த தடைகளை மீறிய வகையில் வடகொரியாவிடம் இருந்து இரும்பு, உருக்கு உள்ளிட்ட பொருட்களை இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இறக்குமதி செய்துள்ளன.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 204 மில்லியன் டொலர்களுக்கு இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீறி இலங்கை வடகொரியாவுடன் பொருளாதார தொடர்புகளை பேணியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரமளவில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவருக்கு ஐ.நா தரப்பில் கடுமையான அழுத்தங்கள் மற்றும் அவரிடம் கடுமையான கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மைத்திரியின் அரசாங்கத்தில் அது சரிசெய்யப்பட்டிருந்தது.

எனினும், வடகொரிய விவகாரம், ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.