யுத்தத்தை வென்றது யார்? ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக பொன்சேகா ஆதாரம் சேர்த்ததன் மர்மம்

Report Print Shalini in அரசியல்

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தான் தயாராக உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது இலங்கை நாட்டின் இராணுவத்தை தங்களது சொந்த நலனுக்காக சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மன நிலை கொண்டவர்கள் இலங்கை நாட்டில் ஆட்சியில் நிலைத்தால் இலங்கை நாடானது மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு இராணுவத்தை சர்வதேசத்தின் முன் சிரம் தாழ்த்த முயற்சிப்பதாக நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம். சிலர் நாம் ஆட்சியை கவிழ்க்க இதனை செய்கிறோமா என சிந்தித்தனர்.

இன்று முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயார் என கூறியுள்ளமையின் மூலம் அது வெளிப்படையாக தெரிகின்றது.

ஜகத் ஜெயசூரிய மீது யுத்த குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் காலப்பகுதியில், பொன்சேகாவே இராணுவத் தளபதியாக இருந்தார்.

பொன்சேகா நினைத்திருந்தால் யார் எது சொன்னாலும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அவர் அதை செய்யாமல் ஆதாரம் சேர்த்ததன் மர்மம் தான் புரியவில்லை.

பொன்சேகாவின் குற்றச்சாட்டில் “பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் உத்தரவின் பெயரிலேயே இது நடைபெற்றுள்ளதாக” கூறுகிறார். இவர் எங்கே, எந்த நோக்கத்தோடு வருகிறார் என்பதை இதன் மூலமே அறிந்து கொள்ளலாம்.

அங்கு நடைபெற்ற யுத்த குற்றச்சாட்டுக்களின் பின்னால் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளார் என்பதன் மூலம், யுத்த விடயங்கள் அனைத்தும் கோத்தபாய ராஜபக்ஸ போன்ற உயர் மட்ட அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை இவர் ஏற்றுக்கொள்கிறார்.

ஆனால், யுத்தத்தை வென்றது நானே என தம்பட்டமும் அடிக்கின்றார். இது எந்த வகையில் நியாயமாகும்? இவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமாக இருந்தால் இவர் பொய் தளபதியாக இருந்துள்ளார் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.