விக்னேஸ்வரனின் இலக்கு தனி தமிழீழம்! விரைவில் மஹிந்த ஜனாதிபதியாக வேண்டும்

Report Print Shalini in அரசியல்

“சமஷ்டி கோருகின்றோம், தனி நாடு அல்ல” என்று விக்னேஸ்வரன் கூறுவதன் அடுத்த இலக்கே தனி தமிழீழம் தான் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு பக்கம் அரசியல் அமைப்பு, மறு பக்கம் யுத்தகுற்றச்சாட்டு. இவை இரண்டும் இணைந்தால் தமிழீழம் உருவாகுவதற்கு சாதகமாகும்.

இந்த நிலையில் தான் வடக்கு முதல்வர் மாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களை வடக்கிற்கு வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.

மேலும், தமிழீழத்தை உருவாக்கும் பாதையில்தான் தற்போது நாடு பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

சமஷ்டியை மட்டுமே கோருகின்றோம், தனி நாட்டை அல்ல என விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். ஆனால் சமஷ்டி கொடுத்த பின் அடுத்ததாக தனி நாட்டையே கோருவார்கள் எனவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பில் சமஷ்டியை வழங்கி, யுத்தகுற்றச்சாட்டு இடம்பெற்றதாக உறுதிப்படுத்தி தனி ஈழத்தை உருவாக்கவே இந்த அரசு முயற்சிக்கின்றது.

ஆகவே இந்த அரசு மக்களை ஏமாற்றுகின்றது. இந்த அரசாங்கத்தை உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மீண்டும் விரைவில் மஹிந்தவின் தலைமையில் புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் இதன்போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.