அர்ஜுன் அலோசியஸின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவு

Report Print Aasim in அரசியல்

பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-16 ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட பிணைமுறி விற்பனையின் போது மோசடியான முறையில் பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளதாக பரவலான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

தற்போதைக்கு விசாரணைகளின் திருப்புமுனையை எட்டியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான முறையில் பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸிடம் விசாரணைகளை நடத்தியது.

நாளைய தினமும் அவரை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அர்ஜுன் அலோசியஸ் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் அவரது வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டுள்ளனர். அர்ஜுன் அலோசியஸ் வீட்டில் இருக்காத நிலையில் வங்கிக் கணக்கு விபரங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரும் உத்தரவு அலோசியஸின் மனைவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் புதல்வியொருவரையே பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மணமுடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.