லலித் - அனுஷவுக்கு சிறைச்சாலையில் சுகபோக வசதி! ரஞ்சன் குற்றச்சாட்டு

Report Print Aasim in அரசியல்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவுக்கு சிறைச்சாலையில் சுகபோக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்குக் கருத்து வௌியிடும்போதே பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள ரஞ்சன், லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோர் நீதிமன்றத்துக்கு வரும்போது நல்ல ஆரோக்கியம் கொண்டவர்களாகவே காட்சியளித்தார்கள்.

ஆனால் தண்டனை விதிக்கப்பட்டவுடன் நோயாளிகளாகிவிட்டார்கள். சிறைச்சாலை மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் வௌியில் இருந்து சைனீஸ் ரெஸ்டோரண்டுகளிலிருந்து அவர்கள் உணவைத் தருவித்துக் கொள்கின்றனர்.

சிறைச்சாலைக்குள் சகல சுகபோக வசதிகளையும் அனுபவிக்கின்றனர். இவ்வாறான பணக்கார குற்றவாளிகளை பாதுகாக்க மகாசங்கத்தினரும் பிச்சை எடுத்து நிதிசேகரிக்க முன்வந்துள்ளனர்.

ஆனால் ஏழைகள் குற்றம் இழைத்து தண்டனை பெற்றால் யாரும் அவர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை என்றும் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.