சைக்கிள் கூட இல்லாத பாடசாலைக்கு சாரதி நியமனம்!

Report Print Aasim in அரசியல்

மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பாடசாலையொன்றுக்கு சைக்கிள் கூட சொந்தமாக இல்லாத நிலையில் வாகன சாரதியாக ஒருவர் நியமனம் பெற்றுள்ளார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது தேர்தல் தொகுதியில் உள்ள இளைஞர்களை நாடெங்கிலும் உள்ள தேசியப் பாடசாலைகளின் கனிஷ்ட ஊழியர்களாக கடந்தவருடம் நியமனம் செய்திருந்தார்.

இதில் ஒருவர் நாவுல ஶ்ரீநாக தேசியப் பாடசாலையில் கடந்த ஒன்றரை வருடகாலமாக சாரதியாக நியமனம் பெற்று சம்பளம் பெற்றுக் கொண்டுள்ளார்., எனினும் குறித்த பாடசாலைக்குச் சொந்தமான சைக்கிள் கூட இல்லாத நிலையில் அவருக்கு சாரதி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்கள் கடந்த சில வாரங்களாக செய்திகளை வௌியிடத் தொடங்கியவுடன் தற்போது குறித்த ஊழியரை கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவருக்கான இடமாற்ற உத்தரவைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட பாடசாலைக்கு சமூகமளிக்காத குறித்த சாரதி உத்தியோகத்தர், அவரது நியமன முறைகேடு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வௌிவரத் தொடங்கியவுடன் மருத்துவ லீவில் விடுப்புப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.