அரசாங்கம் குறுக்கு வழியில் 20ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி?

Report Print Aasim in அரசியல்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இராஜகிரியவில் செவ்வாய்க்கிழமை(12) மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஏற்கெனவே 19ஆவது திருத்தச் சட்டம், காணாமல் போனவர்களுக்கான செயலகம் அமைக்கும் சட்டம் உள்ளிட்ட பல சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் விவாதத்துக்கு உட்படுத்தாமல் குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

அந்த வகையில் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கும் 20வது திருத்தச்சட்டத்தையும் அவ்வாறே எந்த வழியிலாயினும் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.

எதிர்க்கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி குறித்த சட்டமூலத்தை குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொள்ள முனையும் அரசாங்கத்தின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்றும் கலாநிதி குணதாச அமரசேகர அறைகூவல் விடுத்துள்ளார்.