மோசடி லொத்தர் சீட்டுகள் தொடர்பில் பந்துல குணவர்த்தனவிடம் விசாரணை

Report Print Aasim in அரசியல்

மோசடியாக அச்சிடப்பட்ட லொத்தர் சீட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவிடம் மோசடித்தடுப்புப் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன லொத்தர் சீட்டுகள் அச்சடிக்கப்படுவதில் மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

வெற்றி இலக்கங்கள் அச்சிடப்படாத மற்றும் சீட்டிழுப்பு நடைபெறும் திகதி அச்சிடப்படாத பத்து லொத்தர் சீட்டுக்களை அவர் அதன் போது ஊடகவியலாளர்களிடம் காட்சிப்படுத்தியிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய லொத்தர் சபை கொழும்பு மோசடித்தடுப்புப் பிரிவில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தது. அதன் பிரகாரம் செவ்வாய்க்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் அமைந்துள்ள அவரது வீட்டில் பொலிசார் இரண்டு மணிநேரம் மட்டில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.