இலங்கையை எச்சரித்த ஐ.நா ஆணையாளர்! 24 மணி நேரத்திற்குள் மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தை செயற்படுத்தும் ஆணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தை செயற்படுத்துவதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வர்த்தமானியின்படி, காணாமல் போனோர் தொடர்பான பணியகம் உருவாக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள், கடமைகள், ஆணை என்பன எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகியது.

இதன்போது உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர், இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றத் தவறினால் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்தார்.

அத்துடன், காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிட்டு 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தை செயற்படுத்தும் ஆணையில் யையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video..