உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சவால் விடும் ஆறுமுகன் தொண்டமான்

Report Print Thirumal Thirumal in அரசியல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சவாலை கட்சிகளுக்கு விடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தானும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியிட தயாராகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஸ்கெலியா - பெயார்லோன் தோட்ட சனசமூக நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவரவர் தனது கட்சியில் போட்டியிடுவார்களேயானால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடும். தைரியம் இருந்தால் சவாலானவர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு பார்க்கவும். இந்த சவாலுக்கு நான் தயார்.

காங்கிரஸ் அதன் சின்னத்தில் போட்டியிடும். மலையக மக்கள் யார் பக்கம் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் உணர்த்தும். மலையக மக்களுடைய அன்பும், பாசமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு நிறைந்துள்ளது.

இன்று பலப்பரீட்சை வந்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனியாக நின்று எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் செல்வாக்கை காட்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் இந்திய வம்சாவளி மக்களை இதுவரை பாதுகாத்தது போல் தொடர்ந்தும் பாதுகாப்பதையே கடமையாக கொண்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சவாலை கட்சிகளுக்கு விடுக்கின்றேன். நானும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியிட தயாராகவுள்ளேன் என்றார்.