திருத்தங்களின் அடிப்படையிலான 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு: துரைராசசிங்கம்

Report Print Navoj in அரசியல்

திருத்தங்களை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண அமைச்சரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

வாழைச்சேனை, மயிலங்கரச்சி பிரதேச பிரதான வீதி காபட் இடுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார், மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பாக அமைச்சர்களோடும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அந்த வகையில் முதற் தடவையாகக் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் கடந்த 07ஆம் திகதி மாகாண சபையில் விவாதிப்பதில்லை என்று தீர்மானித்து திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.

கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபையில் இந்த திருத்தத்தை உள்ளடக்கிய 20ஆம் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவு என்கின்ற எமது அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தோம்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சட்டமூலம் அமுலாக்கப்பட்டதில் இருந்து ஒரு வருட காலத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள் கலைய வேண்டும் என்றும், எங்களுடைய மாகாணசபை கலைய இருக்கின்றது என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண சபை உட்பட இன்னும் இரண்டு மாகாண சபைகள் கால நீடிப்புச் செய்யப்படக் கூடியதாகவும் ஒரே நாளில் மாகாண சபைத் தோத்தல்கள் நடைபெறக் கூடியதாகவும் அவையும் மாகாண சபைகளுக்குரிய வட்டார அடிப்படையிலே நடைபெறக் கூடியதாகவும் இருக்கும் என்கின்ற அந்த ஏற்பாட்டுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றோம் என்று தெரிவித்தார்.