20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும்

Report Print Navoj in அரசியல்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் அதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை – பலாச்சோலை வீதி செப்பனிடும் பணியை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,

எந்தவொரு அரசியல் நடவடிக்கையாக இருந்தாலும் அதன் இறுதியில் தீர்வு ஒன்றை அடைவது, அந்தத் தீர்வை எழுத்துருவத்திலே நடைமுறைப்படுத்துவது என்பதே இறுதி நடவடிக்கையாக இருக்கும்.

அந்த வகையில் எமது விடுதலைப் போர்கள் சரியான இடத்தை எய்திருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தில் எமது உறவுகள் விட்ட அந்தத் தொடர்ச்சியை அஞ்சல் ஓட்டம் போல இப்போது அடுத்த கைக்கு மாறி அந்தச் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அத்துடன், அரசியலமைப்பு ஆக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே 20ஆவது திருத்தச் சட்டம் வந்திருக்கின்றது. இந்த சட்டத்திற்கு பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டன.

மாகாணசபைத் தேர்தல்கள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதே உண்மை. நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரங்கள் அடிப்படையிலும் நடைபெறவுள்ளன.

மாகாணசபைத் தேர்தல்களை ஒரே சீராக்க வேண்டும் என்பதற்காக 20ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் மாகாணசபைத் தேர்தல்கள் மாகாண வட்டாரங்கள் அடிப்படையில் தான் நடைபெறும்.

சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எப்படி எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று பார்க்கின்றார்கள். நாங்கள் கொண்டு வந்தவர்களே வீட்டுக்குள் இருந்து கொண்டு எங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.