சில் துணியை நான் காணவே இல்லை! எனக்கு கிடைக்கவும் இல்லை: முதலமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் சில் துணிகளை தான் காணவில்லை என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் பிரதிநிதித்துவம் செய்யும் மகரகம தொகுதிக்கு சில் துணிகள் கொண்டு வரப்படவில்லை. அப்படியான சில் துணிகளை நான் விநியோகிக்கவும் இல்லை. நான் எதுவாக இருந்தாலும் அதனை நேரடியாக பேசுபவன். சிலர் உண்மையை மறைத்து பேசுகின்றனர்.

தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அதிகமாக 100 மில்லியன் ரூபாவையே வழங்க முடியும்.

எனினும் சில் துணிகளுக்கு 600 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் ரூபாவுக்கும் மேல் வழங்க முடியாது.

அனுஷ பெல்பிட்ட அந்த சந்தர்ப்பில் இதனை முன்னாள் ஜனாதிபதியிடம் கூறியிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. இதுதான் உண்மை.

அதேபோல் தேர்தல் சமயத்தில் சில் துணிகளை விநியோகிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் தெளிவாக கூறியிருந்தார். இது அதிகாரிகளுக்கு சிறந்த பாடம்.

இந்த இரண்டு அதிகாரிகள் குறித்து உண்மையில் நான் கவலையடைகின்றேன். அரச அதிகாரிகள் தமது வரையறைக்குள் இருந்து பணியாற்றினால் போதுமானது.

சில் துணிகள் எனக்கு கிடைக்கவில்லை. நான் அதனை காணவும் இல்லை. நான் அப்போது மாகாண சபை உறுப்பினராக இருந்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை.

நான் உண்மையை கூறுகிறேன். எனக்கு கிடைத்திருந்தால், விநியோகித்ததாக கூறுவேன். தேர்தல் நேரத்தில் எமக்கு கிடைக்கவில்லை. வேறு யாருக்காவது கிடைத்திருக்குமா என்பதும் எனக்கு தெரியாது” என மேல் மாகாண முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்ட பௌத்த விகாரைகளில் சில் துணிகள் விநியோகிக்கப்பட்டன.

அரச நிறுவனமான தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி இந்த சில் துணிகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் அரச பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில், மூன்றாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.