நேற்று பிரதியமைச்சர், இன்று நாடாளுமன்ற உறுப்பினர், மீண்டும் நாளை பிரதியமைச்சர்

Report Print Aasim in அரசியல்

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுக்கு மீண்டும் பிரதியமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு ஒருகொடவத்தையில் அமைக்கப்பட்ட தொழிற்பயிற்சி அமைச்சின் பயிற்சிக்கூடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோவும் கலந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றவில்லை . அதற்குப் பதிலாக தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி உரையாற்றினார்.

அவர் தனது உரையில் அருந்திக பெர்னாண்டோ குறித்துக் குறிப்பிடுகையில், “நேற்றைய பிரதியமைச்சர், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர், மீண்டும் நாளைய பிரதியமைச்சர்” என்று தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த ஜனாதிபதியும் அதனை ஆமோதிக்கும் வகையில் மௌனமாக இருந்துள்ளார். அதன் காரணமாக அருந்திக பெர்னாண்டோவுக்கு மீண்டும் பிரதியமைச்சுப் பதவியொன்று கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

இன்று காலை அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது மனக்கசப்புகள் களையப்பட்டு அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

எனினும் முன்னர் வகித்த சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறித்தவ விவகாரங்கள் பிரதியமைச்சுப் பதவி மீண்டும் அவருக்கு வழங்கப்பட மாட்டாது என்றே தெரிய வருகின்றது.

அதற்குப் பதிலாக வேறொரு அமைச்சில் பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.