இரு இனங்களினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானத்தை செயற்படுத்த நடவடிக்கை

Report Print Navoj in அரசியல்

இரு இனங்களினதும் இணக்கப்பாட்டுடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தினை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில், கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச சபை முன்றலில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோறளைப்பற்று - வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்றுவட்டார முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக பாரிய பிணக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டக்களப்பு பாதை தரிப்பிடத்தை தமிழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கையளிக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் சுமூக நிலையை ஏற்படுத்தி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இணக்கம் காணப்படவில்லை.

இது தொடர்பாக உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அறிவித்து இந்த பிரச்சினைக்கு உதவுமாறு திணைக்களத்தின் உதவியை நாடியிருந்தேன். இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் இந்த பிரதேசத்திற்கு வருகை தந்தவேளை முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இன்னும் இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு இனங்களுக்குமிடையே எந்தவொரு மனக்கசப்பும் இல்லாமல் இணக்கப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக கூறியிருந்தார்.

உள்ளூராட்சி திணைக்களம், உள்ளூராட்சி அமைச்சின் கீழ் வருவதால் உள்ளூராட்சி அமைச்சின் பணிப்புரைக்கமைய செயற்பட வேண்டிய கடப்பாடு பிரதேச சபைக்கு உள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி அமைச்சின் அறிக்கை கிடைக்கப்படும் வரை இரண்டு வாரகால அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.