அரசாங்கத்தை விமர்சித்தால் சுதந்திரக்கட்சியில் இருக்க முடியாது: மஹிந்த அமரவீர

Report Print Aasim in அரசியல்

அரசாங்கத்தை விமர்சிக்கும் எந்தவொரு அரசியல்வாதிக்கு எதிராகவும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மஹிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் , அருந்திக பெர்னாண்டோவின் பிரதியமைச்சுப் பதவி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அனைவரும் பதவிகளை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் அதன் காரணமாகவே அருந்திகவின் பிரதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு எவரும் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது.

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க முடியாது. அவ்வாறு விமர்சித்தால் அவர்களின் பொறுப்புகள் மாத்திரமன்றி கட்சி அங்கத்துவத்தையும் பறிக்கும் நடவடிக்கை சுதந்திரக் கட்சி மத்திய குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.