தடை செய்யப்பட்ட முறையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு சாதகமாக செயற்படும் கடற்தொழில் திணைக்களம்

Report Print Ashik in அரசியல்

தடை செய்யப்பட்ட முறையை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களுக்கு சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றதாக வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இழுவை மடி கொண்டு தொழில் செய்வதால் கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பில் வட மாகாண மீனவர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய மீனவ சமாசங்களும் கடந்த 08.02.2017ஆம் திகதியன்று கடற்தொழில் அமைச்சரை சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே கடற்தொழில் சட்டத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொண்டுவந்த திருத்தம் அரசவர்த்த மானியிலும் பிரசுரிக்கப்பட்டது.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 02 மாதங்கள் கடந்த நிலையில் எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை சற்று குறைவடைந்திருந்தது.

இருப்பினும் உள்ளூரில் தொழில் புரிவோர் முன்பை விட அதிகமாக பாதிக்கப்படுவதுடன் தங்களின் தொழில் நடவடிக்கைகளை கடலையண்டிய கரையோரங்களில் மிகவும் தீவிரமாக செய்து வருகின்றார்கள்.

இந்த இழுவைமடித் தொழில் முறையை மீன்பிடித் தொழில் புரிவோரும், சில மீனவத் தலைவர்களும், சில அரசியல் பிரதிநிதிகளும், சில மதத் தலைவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்துகின்றனர்.

எனவே இச்சட்ட மூலத்தை நடை முறைப்படுத்துவதில் கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர் காலத்தில் இழக்கப்படப்போவதை இத்தொழிலை நியாயப்படுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்தை விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்றி இதன் பிற்பாடு இந்திய தரப்புடனான மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட படகுகள் போக மீதமாக இருக்கும் படகுகளுக்கும் இச்சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

advertisement