பில்கேட்ஸ் போன்ற சாதனை வர்த்தகர்கள் இலங்கையில் உருவாக வேண்டும்: பிரதமர்

Report Print Aasim in அரசியல்

பில்கேட்ஸ் போன்ற சாதனை வர்த்தகர்கள் இலங்கையிலும் உருவாக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வயம்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக சிறு, குறு வர்த்தகர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் இயந்திராதிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் தொழில்நுட்ப பரிவர்த்தனை நிலையம் ஒன்று பன்னல, மாகந்துறையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் பணத்தை மீண்டும் உழைத்துக் கொள்ளும் வழிமுறைகள் தெரிவதில்லை.

அதற்கான அறிவை வழங்கும் நிலையமாக இந்நிலையம் தொழிற்பட்டு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்.

வடமேல் மாகாணத்தில் போதுமான காணிவளம் இருக்கின்றது. ஏராளம் வர்த்தகர்கள் 50, 60 ஏக்கர் பரப்பளவிலான சிறு பண்ணைகளை கொண்டுள்ளார்கள்.

ஆனால் அவற்றில் இருந்து போதுமான வருமானத்தை ஈட்டிக் கொள்ளத் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள்.

நமது நாட்டில் இன்னும் துறைமுகத்தின் ஊடான ஏற்றுமதிப் பொருட்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுகின்றது.

ஆனாலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் மலர்கள், காய்கறிகள் போன்றவை உடனுக்குடன் விமானநிலையம் வழியாக வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அதன் மூலம் பெரும் தொகை வருமானம் அந்நாட்டுக்கு கிடைக்கின்றது. வடமேல் மாகாண பண்ணைச் செய்கையாளர்களும் அவ்வாறான வழிகளைப் பின்பற்றலாம்.

அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வயம்ப பல்கலைக்கழகம் தயாராக இருக்கின்றது. பில்கேட்ஸ் போன்றவர்கள் பல்கலைக்கழக கல்வியை பெறாத நிலையிலும் சாதனைமிகு வர்த்தகர்களாக பெயர் பொறித்துள்ளார்கள்.

அவ்வாறான வர்த்தகர்களை இலங்கையிலும் உருவாக்குவதே எமது நோக்கமாகும்.எதிர்வரும் 2020ம் ஆண்டுக்குப்பின்னர் அரசாங்கத்தின் கடன்களில் பாரியளவு செலுத்தப்பட்டிருக்கும்.

அதன் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் குறைந்துவிடும் . அதன் காரணமாக அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.