கொழும்பில் வாகன நெரிசலைக் குறைக்க பத்தரமுல்ல அரச காரியாலய நேரங்களில் மாற்றம்

Report Print Rakesh in அரசியல்

கொழும்பிலும் அதன் அயற்பிரதேசங்களிலும் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டத்தின்படி பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரச காரியாலயங்களின் வேலை நேரங்களில் மாற்றமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்று மாத காலம் பரீட்சார்த்தமாக நடத்தப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம் 2017 செப்டெம்பர் 18ஆம் திகதி (அடுத்த திங்கள்) முதல் 2017 டிசம்பர் 17 வரை முன்னெடுக்கப்படும்.

அதன்பிரகாரம் காரியாலயத்துக்கு சமூகமளிக்கவேண்டிய நேரம் காலை 7.30 முதல் 9.15 எனவும் வெளியேறும் நேரம் பிற்பகல் 3.15 முதல் 5 மணி வரை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றங்களால் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாதவகையில் அரச ஊழியர்கள் காலை 9.15 தொடக்கம் பிற்பகல் 3.15 வரை அவரவர் காரியாலங்களில் பணியில் இருக்கவேண்டும்.

இந்த நடைமுறை சரியாக செயற்படுத்தப்படுவது அந்தந்த அரச நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.

மூன்று மாதப் பரீட்சார்த்த காலத்தில் பின் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது கைவிடுவதா என்பது பற்றிய தீர்மானம் எடுக்கப்படும்.

இந்த பரீட்சார்த்தத் திட்டத்தை சரியாக வழிநடத்த அரச நிறுவன, திணைக்கள மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.