கூட்டரசு உடைவதை தடுக்கவே எனது பதவி பறிப்பு

Report Print Rakesh in அரசியல்

தேசிய அரசிலிருந்து அமைச்சர்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே தனது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து இவர் ஜனாதிபதியால் நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவரது எதிர்கால நடவடிக்கை குறித்து வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அரசுக்குள் இருந்துகொண்டு அதன் குறைகளையும், மக்கள் கருத்துகளையும் சுட்டிக்காட்டுவதாலேயே எம்மை வேண்டாதவர்களாகப் பார்க்கின்றனர்.

எனது பதவி பறிக்கப்படும் என்பது முன்கூட்டியே தெரியும். எனவே, இதனால் நான் அதிர்ச்சியடையவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு இழுத்தடித்துவருகின்றது. நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு வழங்குவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது.

இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறான காரணங்களால்தான் எம்மை ஓரங்கட்டப் பார்க்கின்றனர்.

இதேவேளை, எது எப்படியே எனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பற்றி அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.