ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி : சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே சாத்தியம் என்கிறார் விக்கி

Report Print Rakesh in அரசியல்

கடந்த அரசின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையிலான சட்டம் விடுபாட்டு நிலையில் காணப்படுகையில் இவை தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்கும், நீதியின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேசத்தின் அழுத்தம் முக்கியமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுதந்திர ஊடக இயக்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே வடக்கு மாகாண முதலைமைச்சர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் கொலை குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தால் நன்று என்ற கருத்தையும் முதலைமைச்சர் வெளிப்படுத்தினார்.

வடக்கிலுள்ள ஊடகங்களில் சில தாம் தெரிவிக்கும் கருத்துகளை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இதனால் மக்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வழிவகுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

தென்பகுதியிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளை தாம் அண்மைக்காலத்தில் படிப்பதில்லை என ஆச்சரியமிக்க கருத்தை இதன்போது வெளிப்படுத்திய முதலைமைச்சர் விக்னேஸ்வரன், இதற்கு வேலைப்பளு மட்டுமன்றி நேரம் பிந்திய நிலையில் அப்பத்திரிகைகள் விநியோகிக்கப்படுவதும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தாம் தெரிவிக்கும் கருத்துகளை முற்றுமே முரணான வகையில் தென்பகுதி பத்திரிகைகள் வெளியிடுவதாகவும், இதனால் தம்மைப் பயங்கரவாதியாக சித்திரிக்க முயல்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.