ஜனாதிபதி வாய்ப்பேச்சில் வீரம் காட்டுகின்றார் : தினேஷ் குணவர்த்தன

Report Print Aasim in அரசியல்

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக தலைவர் தினேஷ் குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தவிடம் சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை தாமதித்துள்ளதாகவும் விரைவில் அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் அளிக்கும் ஊக்கம் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ஹுசைன் இலங்கை மீது தொடர்ச்சியாக போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தலைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தில் இருந்து முன்வைக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். இது கவலைக்குரிய ஒரு நிலையாகும் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவினால் ஜகத் ஜயசூரிய மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. அரசாங்கம் அவற்றை திருத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

இராணுவத்தினரை வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ, சிறைச்சாலைகளுக்கோ அனுப்பதான் ஒருபோதும் இடமளிக்கப் ​போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால ஊடகங்கள் முன்னால் வாய்ப்பேச்சில் வீரம் காட்டுகின்றார்.

ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடு இவ்வாறாக இருக்கும் நிலையில் இராணுவத்தினர் தூக்குமேடைக்கு அனுப்பப்படுவதை தடுக்க முடியாது போகும் என்றும் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.