தேர்தல் பணிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் விசேட குழுக்கள்

Report Print Aasim in அரசியல்

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் பணிக்கான விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடந்த 12ஆம் திகதி சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தேர்தல் செயற்பாட்டுக்குழு, வேட்பாளர் தெரிவுக்குழு, பிரச்சாரக்குழு போன்ற 10 இற்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அதன் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக தேர்தல் தொகுதி ரீதியாக கட்சி மறுசீரமைப்புப் பணிகள், கிராமிய மட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட ரீதியான பிரச்சாரக் கூட்டங்கள் என்று சுதந்திரக் கட்சி தனது தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது.

இதன் ஒருகட்டமாக எதிர்வரும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கட்சியின் பொறுப்பாளர்களாக அந்தந்த மாவட்டங்களிலிருந்து ஒரு அமைச்சரும், வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.