மகிந்த அரசில் 27 பேரை பலியெடுத்த படுகொலை சம்பவம்! சாட்சியாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Report Print Murali Murali in அரசியல்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைக்கைதிகளின் படுகொலை சம்பவத்தின் பிரதான சாட்சியளரான சுதேஷ் நந்திமால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”அண்மையில் தனது வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதிலும், நம்பிக்கை ஏற்படும் வகையில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுக்கவில்லை.

அத்துடன், உயிர் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள தனக்கு அரசாங்கமும் உரிய பாதுகாப்பை வழங்க தவறியுள்ளது. இந்நிலையில், வெலிக்கடை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சாட்சிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தி சாட்சியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 27 சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பு கூறவேண்டும் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் பொறுப்பு கூற வேண்டும் என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத்பொன்சேகா அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகளுடன் மோதல் ஏற்பட்ட போது ஜகத் ஜயசூரியவின் உத்தரவின் படியே படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த கொலைகள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சரத்பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.