20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள்

Report Print Navoj in அரசியல்

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ் கூறியுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சட்டமூலத்தை ஏகமனதாக ஏற்று வாக்களித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்திற்கு நடத்த விடாது ஒரு வருடத்திற்கு ஒத்தி வைத்து வரப் போகின்ற காலத்திற்கும் தங்களின் சுகபோகங்களை அனுபவிக்க எண்ணியுள்ளார்கள்.

இன்னும் சொல்லப்போனால் கிழக்கு மாகாண சபை மக்களின் நிதியை இன்னும் ஒரு வருடத்திற்கு அனுபவிக்கப் போகின்றது என்றே சொல்ல வேண்டும்.

இந்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள் என்றே கருதப்படுவார்கள். இவர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றார்கள்.

மக்களின் உரிமைகளைக் குறுக்கு வழியில் பறித்தது மட்டுமல்லாமல், அவர்களை மத்திய அரசிற்கு அடகு வைத்திருக்கின்றார்கள். மக்களை முட்டாள்கள் என்று எண்ணிச் செயற்படுகின்றார்கள்.

உரிமைப் போராட்டத்தில் பல இழப்புகளுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய அபிவிருத்தி நிதிகள் குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் பயன்படக் கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றனர்.

இன்னுமொரு வருடத்திற்கு தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளில் பற்றாக்குறைதான் தொடரப் போகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு முதுகெலும்பிருந்தால் இந்த சட்டமூலத்தை ஆதரித்தமைக்காக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.