அரசாங்கம் சமஷ்டித்தீர்வை நடைமுறைப்படுத்த முனைகின்றது! கெடம்பே விகாராதிபதி

Report Print Aasim in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் சமஷ்டித் தீர்வை நடைமுறைப்படுத்த முனைவதாக கெடம்பே விகாராதிபதி சிறிவிமல தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கெடம்பே விகாரையில் நேற்றைய தினம் நடைபெற்ற பிக்குமார் சம்மேளனம் ஒன்றில் கருத்து வௌியிடும்போது கெடம்பே விகாராதிபதி கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,

இந்த நாட்டில் தற்போது புதிய அரசியலமைப்பொன்றுக்கு எதுவித தேவையும் இல்லை. ஆனால் அவ்வாறான பின்புலத்தில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைக்கவும், சமஷ்டி அடிப்படையில் நாட்டைத் துண்டாடவுமே புதிய அரசியலமைப்பை கொண்டுவர முயற்சிக்கின்றது.

அத்துடன் பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாதொழிக்கவும் அரசாங்கம் சூட்சுமமான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண பொலிஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் போது இன அடிப்படையிலான முன்னுரிமை வழங்கப்பட்டு பொலிஸார் சட்டத்தை பாரபட்சமாக நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்படலாம்.

இவ்வாறான நிலையில் பிக்குமார்கள் முன்வந்து அரசியலமைப்பு மற்றும் நாட்டைப் பாதுக்காப்பதற்காக செயற்பட வேண்டும் என்றும் கெடம்பே விகாராதிபதி சிறிவிமல தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.