பெண்களைக் கொண்டு மாற்றங்களை செய்ய முன்வரவேண்டும்!

Report Print Navoj in அரசியல்

அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம் மற்றும் பிள்ளைகளின் கல்வியில் வளர்ச்சி போன்ற மாற்றங்களை மகளிரைக் கொண்டு செய்ய வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கின்றேன் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சுயதொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

பிரதி அமைச்சரின் மகளிர் இணைப்பாளர் ஜெ.மீனா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மது பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது மாவட்டமாக திகழ்கின்றது. தேசியத்திலே முதலாவதாக சாதனை படைத்த மாவட்டம் போன்று மதுபாவனைக்கு செலவழிக்கும் முதலாவது மாவட்டமாக காணப்படுகின்றது.

இந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டுமாக இருந்தால் உங்களுடைய பங்களிப்பு எங்களுக்குத் தேவையாக உள்ளது. போதைப் பாவனையில் இருந்து பாதிக்கின்ற சமூகத்தை நாங்கள் உருவாக்க முடியாது.

போதைக்கு என்று நாங்கள் அள்ளிக் கொடுப்போமாக இருந்தால் குடும்பச் செலவுக்கான இருநூறு ரூபாய் போதுமானதாக இருக்காது. இந்த மாற்றம் மகளிருக்குள் இருந்து வரவேண்டும்.

அரசியல் மாற்றமாக இருந்தாலும் சரி, குடும்ப மாற்றமாக இருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைகள் கல்வியில் வளரவேண்டும் என்ற மாற்றமாக இருந்தாலும் சரி உங்களை வைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.