விசாரணைகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்! மைத்திரி திட்டவட்டம்

Report Print Rakesh in அரசியல்

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசீம் ஆகியோர் நேற்றுக் காலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பால் நேற்றுக் காலை 8 மணிக்கு நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் முற்பகல் 10 மணிக்கு பிற்போடப்பட்டது.

நேற்றையதினம் விசாரணை ஆணைக்குழுவில் மேற்படி இரு அமைச்சர்களும் ஆஜராகுமாறு கேட்கப்பட்டிருந்தபோதும் அமைச்சரவைக் கூட்டத்தைக் காரணங்காட்டி இன்றைய தினம் புதன்கிழமை ஆணைக்குழு முன் ஆஜராவதாக அவர்கள் முன்னறிவித்தல் கொடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் நேற்றுக் காலை ஜனாதிபதியை சந்திக்க முன்னர் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோர் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைப்படியே இவை நடைபெற்றன.

அந்தச் சூழ்நிலையில் நேற்றுக் காலை ஜனாதிபதியைச் சந்தித்து நிலைமைகளை விளக்கிய இந்த அமைச்சர்கள் பிணைமுறி விவகாரத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக்கூறியிருப்பதாக அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும் அமைச்சர்களின் இந்தக் கருத்துகளை மிகவும் நிதானமாகக் கேட்டறிந்த ஜனாதிபதி மைத்திரி பிணைமுறி விவகாரத்தை ஐ.தே.கவும் பிரதமரும் எதிர்நோக்கியே ஆகவேண்டும் எனவும், அதில் நிவாரணத்தையோ சலுகைகளையோ தம்மால் வழங்க முடியாதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததையடுத்து பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் இன்றையதினம் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரமவும், கபீர் ஹாசீமும் ஆஜரானார்கள்.