'விடுதலைப்புலிகள் கைதிகளை கொன்றார்கள்' என்பதை நிரூபிக்கத்தான் இந்த நாடகமா? முதலமைச்சரின் ஊகம்

Report Print Shalini in அரசியல்

பொதுவானதும், பிரத்தியேகமானதுமான இரு கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பொதுவான கோரிக்கை -

“அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொதுமன்னிப்பின் கீழ்விடுதலை செய்யப்படவேண்டும் என்பது எனது பொதுவான கோரிக்கை. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது.

ஜெனிவாவில் பலவருடங்களுக்கு முன்னரே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக ஐ.நாவுக்கு உறுதிமொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை.

அதனைக் கை வாங்கிவிட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும்.

ஏனென்றால் எமது வழக்கமான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான சரத்துக்களே. குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இதுவரை இருந்து வந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான கைதிகள் இதுவரையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.

பிரத்தியேகமான கோரிக்கை -

அநுராதபுர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பான கோரிக்கை.

2009ல் இருவர் கைது செய்யப்பட்டு 2012 வரையில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து மறியலில் வைத்திருக்கப்பட்டார்கள். மூன்றாம் நபரைக் கைது செய்த பின் 2012ல் குற்றச்சாட்டுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐம்பது தடவைகளுக்கு மேல் வழக்கு தவணை கொடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு தொடர் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு, வழக்கு தொடங்கவிருக்கும் நேரத்தில் அநுராதபுரத்திற்கு மாற்றுமாறு சட்டத்துறை தலைமை அதிபதி ஆணை வழங்கியுள்ளார்கள்.

இதுஒரு பொறுப்பற்ற செயலாகத் தென்படுகிறது. உண்மையில் வவுனியாமேல் நீதிமன்ற நீதிபதி வேண்டா வெறுப்பாகத்தான் உத்தியோகபூர்வ கட்டாயத்தின் நிமித்தம் வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றினார்.

காரணங்கள் கூறப்படாவிட்டாலும் சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்றது.

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது. சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்கள் வதிவிடங்களில் சேர்ப்பிக்க முடியும்.

ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் போது சாட்சிகள் பயந்துவரத் தயங்குகின்றார்கள் என்பது எனக்கு ஒரு நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது.

மருத்துவமனையில் இருந்துகொண்டே இது பற்றிஆராய்ந்தேன். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி..

“போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும், அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்பு பட்டிருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் கைதில் இருக்கும் வேறு சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது.

அப்படியெனில் அரச சாட்சிகளாக மாறிய இந்த மூன்று தமிழ்ச் சாட்சிகள் பற்றியே அரசுக்கு கரிசனை போலத் தெரிகிறது. இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கின்றேன்.

நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப்புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகி விட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்கு சமனாகப் புலிகளும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேசஅரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும்.

இதனால் தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இவை என்னுடைய ஊகமே ஒளிய முழுமையான தரவுகள் எனக்கு தரப்படவில்லை.

சாட்சிகள் வவுனியா வரப் பயப்படுகின்றார்கள் என்றால் என்ன மாதிரியான பயமுறுத்தல் காரணமாக அங்குவரப் பயப்படுகின்றார்கள் என்று சட்டத்துறை தலைமை அதிபதிக்கு சத்தியக் கடதாசிகள் கையளித்துள்ளார்களா என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

குறித்த தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும்.

அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரசதரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியமைக்கான காரணம் எனநான் யூகிக்கின்றேன்.

உண்மை வெளிவந்தால் வவுனியாமேல் நீதிமன்ற நீதிபதி வழக்கைத் தூக்கி எறியத் தயங்க மாட்டார் என்பது சட்டத்துறைத் தலைமை அதிபதிக்குத் தெரியும்.” என முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.