ரோஹிதவுக்கு கடிதம் அனுப்பியுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

Report Print Rusath in அரசியல்

பட்டதாரிகளின் நியமனம் வழங்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்தக் கோரி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்தக் கடித்தில் மேலும்,

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டங்களை முன்னெடுத்து போட்டி தற்போது பரீட்சைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் சேவைக்கான நியமனங்களை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினயமாக வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.

எமது பட்டதாரிகள் வீதியோரங்களில் போராட்டங்களை முன்னெடுக்கையில் அவர்களுக்கான நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோரை சந்தித்தோம்.

அதற்கமைவாக அவர்களின் ஆலோசனைக்கமைய எமது பட்டதாரிகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் தரவுகளை திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பி அவர்களுக்கான நியமன அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்களுடன் பங்கேற்ற அரச நிகழ்வுகளில் பகிரங்கமாக தனிப்பட்ட ரீதியிலும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு நாம் பல தடவைகள் வலியுறுத்தினோம்.

எமது தொடர்ச்சியான முயற்சியின் பலனாக எமக்கு முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்தது. அதனடிப்படையில் எமது மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைவதற்குள் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு நாம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தோம்.

அதற்கமைவாக முதற்கட்டமாக 254 பேருக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கியிருந்தோம். மீதமுள்ள 1446 பேருக்கான நியமனங்களை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னடுத்தபோதும் எமது மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

இதன் காரணமாக எமது பட்டதாரிகள் தொடர்ந்தும் நியமனங்களுக்காக காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுகோரப்படுமாயின் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மேலும் கால தாமதமாவதற்கு இடமுள்ளதால் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

இதேவேளை நாம் எடுத்த முயற்சியின் பயனாக பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45 ஆகமாற்ற முடிந்தது. இந்த முயற்சியில் நீங்கள் அளித்த பங்களிப்புக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

எவ்வாறாயினும் நமது நியமனப் பொறிமுறை கால தாமதமடைந்ததன் காரணமாக ஒரு சிலர் நியமன வயதெல்லையை கடந்துள்ளனர். பட்டதாரிகளின் போராட்டங்கள் இடம்பெற்றபோது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பட்டப்படிப்பை உரிய வயதில் நிறைவு செய்ய முடியாமல் போனோருக்குக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக அமைந்திருந்தது.

அதற்கமைவாக மனிதாபிமான ரீதியான கோரிக்கையாக அவர்களை கருத்திற் கொண்டு 45 வயதை கடந்த பட்டதாரிகளையும் நியமனம் வழங்கும் பொறிமுறையில் உள்வாங்குவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனவே கிழக்கு மாகாண பட்டதாரிகளின் வேதனைகள் மற்றும் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்து நீங்கள் ஊடகங்கள் வாயிலாக இதற்கு முன்னர் அறிந்திருப்பீர்கள்.

ஆகவே அவர்களின் துயர்களையும், வேதனைகளையும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையினை விரைவில் முன்னெடுப்பீர்கள் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.