ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை கூண்டோடு தூக்க மைத்திரி முடிவு!

Report Print Rakesh in அரசியல்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் மேலும் சில அமைச்சர்கள் தொடர்புபட்டுள்ளனர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபணமாகும் பட்சத்தில் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை துறக்கவேண்டியநிலை ஏற்பட்டது.

இந்த விடயத்திலும் ஜனாதிபதி நேரடித் தலையீட்டை செய்திருந்தார். ஊழல் ஆட்சிக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருந்துவரும் நிலையில், பிணைமுறி மோசடியுடன் மேலும் சில அமைச்சர்கள் தொடர்புபட்டுள்ளனர் என அவரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம் ஆகியோரிடம் சாட்சிப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இவ்விருவரும் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.

மேற்படி விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியை அமைச்சர்களான மலிக் மற்றும் கபீர் ஆகியோர் சந்தித்தபோதும் அவர்கள் தரப்பு நியாயங்களை ஜனாதிபதி திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் எனத் தெரியவருகின்றது.

பிணைமுறி மோசடி விவகாரத்தை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னர் வலியுறுத்திருந்ததை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த விசாரணையில் அரசு தலையீடுகளைச் செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பிணைமுறி மோசடி விவகாரத்தில் மேலும் சில அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணைகளின் மூலம் உறுதியாகும் பட்சத்தில் அவர்களையும் பதவியில் இருந்து தூக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

இந்தத் தீர்மானத்தை அவர் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவித்திருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.