வித்தியாவிற்கு அக்கறை காட்டிய ஆணையகம்: அரசியல் கைதிகள் தொடர்பில் பாராமுகம்

Report Print Nesan Nesan in அரசியல்

சிறையில் வாடும் முழு தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், அவர்களது போராட்டத்தின் தன்மை குறித்தும் இன்றைய தினம் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமை பேரவையினால் கொண்டு வரப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதென்பது மிகவும் முக்கியமான விடயமொன்றாகும்.

ஆனால் இன்று தமிழ் அரசியல் கைதிகள் 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்களது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் இன்றைய நிலையை கவனத்திற்கொண்டு நல்லாட்சி அரசு அவர்களின்பால் தனது அக்கறையை காட்டவேண்டும்.

அரசியல் கைதிகளாக ஆக்கப்பட்டு எந்தவிதமான குற்றங்களையும் இழைக்காமல் சிறையல் வாழும் அவர்களது, வழக்குகள் இதுவரைகாலமும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டு வருகின்றது.

இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்க அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்.

விசேடமாக கூறவேண்டுமாக இருந்தால் யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு சிறைச்சாலை ஆணையகத்தினால் நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்டது, சிறந்த தீர்ப்பும் கிடைக்கப்பெற்றது.

ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் ஆணையகமானது அவர்களது வழக்குகளை கணக்கில் எடுக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி வழிசமைத்துக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.