கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் உள்ள 9 அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த ஒன்பது பேரும் எந்த வித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கெதிராக எவ்வித வழக்குகளும் இல்லாமல் 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
தேவசகாயம் உதயகுமார், நடராசா சபேசன், நடேஸ் குகநாதன், ரசாதுரை ஜெயந்தன், நடேசன் தர்மராசா, ஜோசப் செபஸ்டியன், சீத்திகோபால் ஆறுமுகம், இதிர்மனசிங்கம் ஆதிச்சந்திரன், சத்தியசீலன் ஜெயந்தன் பெர்னாண்டோ ஆகியோரே குறித்த கைதிகளாவர்.
இவர்கள் 9 பேருக்கும் “EER 15/2015” என நீதிமன்றத்தினால் பொதுவான ஓர் இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு அனுதாப ரீதியிலேனும் ஓர் நிரந்தர தீர்வினை வழங்கக் கோரி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.