மீண்டும் தவறு செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது

Report Print Thirumal Thirumal in அரசியல்

மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறால் தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றோம் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், புளூம்பீல்ட் பிரிவில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அன்று செய்த தவறை போல் இன்று செய்யாமல் சிந்திக்க வேண்டும். மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது.

75 வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் மக்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்துக் கொடுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது நெருப்பு, சுடும் என்று இ.தொ.கா கூறியதும், சுட்டாலும் பரவாயில்லை என்று கூறி மக்கள் நெருப்பை தொட்டு இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நான் அமைச்சராக இருந்த நேரத்தில் உரிய முறையில் வீடுகளை அமைத்து கொடுத்தேன். ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறுகின்றதா? இல்லை. முறையற்ற ரீதியில் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நமது முன்னோர்கள் உருவாக்கிய தேயிலை மலைகளை நமக்கு பிரித்து கொடுத்தால் என்ன? எம்மால் பராமரிக்க முடியும். தேயிலை காணிகள் பிரிக்கப்படுகின்றது.

நமது மரக்கறி தோட்டங்கள் தோட்ட அதிகாரிகளால் அபகறிக்கப்படுகின்றது. தற்போது, இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.