மஹிந்த கட்சியின் வெற்றி! த.தே.கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வு?

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கட்சி, நடைபெற்று முடிந்த தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்யபோகிறது? என்பதை த.தே.கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொண்டிருத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பலவீனப்பட்டிருக்கிறது.

இம்முறை மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள். முன்னர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பலத்த பின்னடைவினை சந்தித்துள்ளது.

வெருகல், பூநகரி போன்ற இடங்களை தவிர்த்து சகல இடங்களிலும் பெரும்பான்மையினை இழந்துள்ளது.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தாபன மயப்படுத்த வேண்டும் என நாம் பல சந்தர்பங்களில் கேட்டிருந்தபோதும் அதனை தமிழரசுக் கட்சி நிராகரித்தது.

இதனால் நாம் கட்சியை விட் டு வெளியேறி தனித்து இயங்கும் தீர்மானத்தினை எடுத்தோம்.

மேலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலமையிலான அணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இதனால் தெற்கில் ஆட்சி மாறுமா? என்னும் அளவுக்கு நிலமைகள் மாறியிருக்கிறன. இந்த நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.

இல்லையெனில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

இதனை விடுத்து இரா.சம்பந்தனும், சுமந்திரனும் வாயால் கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதால் பயன் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.