நல்லாட்சி அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும்: இது மக்களின் கோரிக்கை

Report Print Thirumal Thirumal in அரசியல்

கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளதாக முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

11 உள்ளூராட்சி சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பு நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இந்த வெற்றியை தமக்கு ஈட்டித் தந்த மக்களுக்கு நாம் நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய எந்த ஒரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. அதனாலேயே மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமாகாத ஒன்று. அதனால் இ.தொ.காவை இணைத்துக்கொண்டோம்.

எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது. எங்களுக்கென்று தனிப்பட்ட இலக்கு ஒன்று இருக்கின்றது. அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலிலும் கூட்டு எதிரணி வெற்றிப்பெறும். எனினும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் தற்போதைக்கு என்னால் எதுவும் உறுதிப்பட கூற முடியாது என்றும் சீ.பீ.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.