கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது

Report Print Ashik in அரசியல்

நாங்கள் எல்லாவற்றையும் இழந்த போதும் எங்களுடைய கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது என மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு பெருவிழா இன்று காலை ஆண்டாங்குளம் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நான் இந்த மண்ணிற்கு உரியவன். சிறு வயதில் இருந்தே இப்படியான பல்வேறு நிகழ்வுகள் இங்கே நடப்பதை நான் அறிவேன்.

மிக்க மகிழ்ச்சியாக அன்றைய காலம் இருந்தது. மாதம் ஒரு முறை கலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை வழமை.

ஆனால் கொடுமையான அந்த 30 வருட போரின் பின்னர் அந்த சந்தர்ப்பங்கள் எல்லாம் கைவிட்டு போயுள்ளது. மக்களின் வாழ்க்கையில் கைவிடப்பட்ட ஒன்றாக கடந்த கால சம்பவங்கள் அமைந்துள்ளன.

ஆகவே நான் ஒரு பிரதேச செயலாளர் என்ற வகையில் மீண்டும் இந்த மாந்தை மேற்கு பிரதேசம் பழைய மகிழ்வுடன் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்ற அவா என்னிடம் உள்ளது.

பல்வேறு நபர்களின் உதவியுடன் இந்த சித்திரை புத்தாண்டு பெருவிழாவை நடத்த ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். அந்த வகையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

நான் இந்த மண்ணில் பிறந்தவன் என்ற அடிப்படையில் இந்த மண் கடந்த கால துயரச்சம்பவங்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சியுடன் புத்துயிர் பெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம். ஆனால் எங்களுடைய கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது.

அந்த வகையிலே நாங்கள் இந்த பிரதேசத்தில் சித்திரை புத்தாண்டு விழாவை நடத்த தீர்மானித்திருந்தோம். அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.