வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரை தெரிவு செய்யும் அமர்வு இடம்பெற்றது.

இதில், தவிசாளர் தெரிவுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன போட்டியிட்டன.

கூட்டமைப்பின் சார்பில் நா.தணிகாசலம் 11 வாக்குகளை பெற்றார். கூட்டமைப்பைச் சேர்ந்த 8 பேரும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயரூபனும் 11 வாக்குகளை பெற்றார். அவருக்கு அவரது கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

பின்னர் திருவுலச் சீட்டு மூலம் கூட்டமைப்பின் நா.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வன், பொதுஜன பெரமுன சார்பில் க.விக்கிரமபால, கூட்டமைப்பு சார்பில் ந.யோகராஜா ஆகியோர் போட்டி இடவுள்ளதாக முன்மொழியப்பட்ட நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் நா.யோகராஜாவுக்கு ஆதரவாக 14 பேர் வாக்களித்து, உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தவிசாளர் தெரிவில் நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, உப தவிசாளர் தெரிவில் கூட்டமைப்புக்கு வாக்களித்தது.

உப தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலைமை வகித்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலைமை வகித்தார்.

இத்தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், ம.ஜெயதிலக, தர்மபால செனவிரட்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.