வவுனியாவில் மற்றுமொரு பிரதேசசபையை கைப்பற்றியது கூட்டமைப்பு

Report Print Thileepan Thileepan in அரசியல்

இரண்டாம் இணைப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இவர் 14 வாக்குகளை பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வி.கூட்டணியை சேர்ந்த த.சிவராசா 13 வாக்குகளை பெற்றிருந்தார்.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒரு ஆசனம் நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை.

உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எஸ். குகதாசன் 14 வாக்குகளை பெற்றிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கு தமிழ் பிரதேசபையில் 11 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரும் சுயேட்சையில் இருவருமாக ஆதரவு வழங்கியிருந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 30 உறுப்பினர்கள் இன்றைய தினம் வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் வடக்கு மாகாண உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், சிவாஜிலிங்கம், கே.கருணாதாச மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று இடம்பெற்றது.

இதில், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட து.நடராஜசிங்கம் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜே.மகேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபையின் ஆட்சியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள், புகைப்படங்கள்: தீசன்