மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன்

Report Print Subathra in அரசியல்

“பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“

கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார்.

இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.

புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததாக பெருமை கொள்ளும் மஹிந்த ராஜபக் ஷவும் கூட, புலிகளின் கொள்கை தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று கூறத் தயாராக இல்லை. அது இன்னொரு அரசியல்.

ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையில் கூறியுள்ள கருத்துக்கள் ஆழமானவை, மாத்திரமன்றி, அறியப்பட வேண்டிய விடயங்கள் பலவற்றையும் உள்ளடக்கியவை என்றே தோன்றுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில் புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டதை விட முக்கியமான விடயம், கடந்த மூன்று ஆண்டுகளில் புலிகளின், கொள்கையைத் தோற்கடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றியதேயாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில், விடுதலைப் புலிகள் என்றோ விடுதலைப் புலிகளின் கொள்கை என்றோ கூறவில்லை. பயங்கரவாதிகள் என்ற பதத்தையே பயன்படுத்தியிருக்கிறார்.

இது, மஹிந்த ராஜபக் ஷவின் காலத்து அணுகுமுறை. மஹிந்த ராஜபக் ஷ தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று தமிழ்மக்களுக்கு எதிரான- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்தியவர்.

அந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக, போரின் இறுதிக்கட்டத்தில் முக்கியமான பல தருணங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பயங்கரவாதத்தையே பற்றிப் பிடித்திருக்கிறார்.

ஆனால், மைத்திரிபால சிறிசேன கூறும் பயங்கரவாதம் என்பது புலிகளின் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தான். ஆனால் ஆயுதப் போராட்டத்தை நடத்துவது தான் புலிகளின் கொள்கையோ சித்தாந்தமோ அல்ல.

ஓர் இலக்கை அடைவதற்காக தெரிவு செய்யப்பட்ட வழி தான் ஆயுதப் போராட்டம். அரசாங்கத்தின் பார்வையில், அது பயங்கரவாதமாக இருந்தாலும், தமிழ் மக்களின் பார்வையில் அது பயங்கரவாதமாக தெரியவில்லை.

அதனால் தான், போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை என்று ஜனாதிபதியே புலம்புகின்ற நிலைக்குக் காரணம்.

புலிகளின் கொள்கை ஏன் தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். புலிகளின் கொள்கை என்பது அரசாங்கம் சொல்லும் ஒரு பயங்கரவாத அமைப்பினது கொள்கை அல்ல. தமிழ் மக்களால், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் இலட்சியத்தை நோக்கிய பயணமாகவே அந்தக் கொள்கை அமைந்திருந்தது. அமைதி வழியில், அரசியல் வழிமுறைகளின் ஊடாக, தமிழ் மக்கள் தமக்கான நியாயமான நீதியான தீர்வு கிடைக்காத போது, தான், தனிநாடு என்ற கொள்கையைத் தெரிவு செய்தார்கள். அதுவே நிரந்தரமான- நிம்மதியான வாழ்வைத் தரும் என்று நம்பினார்கள். அதனை அரசியல் வழிமுறையின் ஊடாக அடைய முடியாது என்பதால் தான், ஆயுத வழிமுறையைத் தெரிவு செய்தார்கள். ஆயுத வழிப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டாலும், தமிழர்கள் தமக்கான நிம்மதியைத் தரக்கூடிய தீர்வு என்று கருதும் கொள்கையை இன்னமும் முழுமையாகக் கைவிடவில்லை.

அத்தகைய கொள்கையை – இலட்சியத்தை அடைவது சாத்தியமா என்ற சந்தேகங்கள் இருந்தாலும், அந்தக் கொள்கை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை, சிங்களத் தலைவர்களே கூறுகிறார்கள்.

ஏனென்றால், அந்தக் கொள்கை உருவானதற்கான காரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அரசியல் அதிகாரங்கள் அற்றவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட போது தான், தனிநாட்டுக்கான கொள்கை உருவானது.

இன்னமும் கூட தமிழர்கள் நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்களாக பார்க்கப்படுகின்ற நிலை மாறவில்லை. வந்தேறு குடிகளாக வர்ணிக்கப்படுகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்பட்டு, தாயகப் பிரதேசங்களிலேயே சிறுபான்மையினராக்கப்படுகின்றனர்.

அரசியல் அதிகாரங்கள் ஏதுமற்றவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் நிலை இன்னமும் தொடர்கின்ற சூழ்நிலையில், எப்படி தனிநாட்டுக்கான கோரிக்கை பலவீனமடையும் என்று எதிர்பார்க்க முடியும்.?

ஒரு கொள்கையைத் தோற்கடிக்க வேண்டுமாயின், அதன் வழியிலேயே செல்ல வேண்டும். அந்தக் கொள்கை உருவாக காரணமான பிரச்சினைகளைத் தேடித் திரிந்து தீர்க்க வேண்டும். ஆனால் அரசாங்கம் வெறுமனே ஆயுதப் போராட்ட வழிமுறையை மாத்திரம் தோற்கடித்து விட்டு, அதன் மூலம் தனிநாட்டுக் கொள்கையைத் தோற்கடிக்கலாம் என்று நம்பியது.

அந்த நம்பிக்கை தான் இன்னமும் புலிகளின் கொள்கை உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதன் மூலம் மாத்திரமே, புலிகளின் கொள்கையின் உயிர்ப்புக்கு சவால் விடுக்க முடியும்.

ஆனால் முன்னைய அரசாங்கம் மாத்திரமன்றி, இப்போதைய அரசாங்கமும் அதனைச் செய்யத் தவறியிருக்கின்றது

மஹிந்த ராஜபக் ஷ தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றி கவலைப்பட்டவரில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தே ஆட்சியில் அமர்ந்தது.

இந்த அரசாங்கம், தனது ஆட்சிக்காலத்திலும், அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான எந்த முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கவில்லை. வெறும் ஒப்புக்காக அரசியலமைப்பு மாற்றம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் பேசியதே தவிர, அவை யாவும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றன.

இது தவிர, இப்போதைய அரசாங்கமும் கூட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்காக பணியாற்றுவதை விட, புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்கும் சிந்தனையிலேயே காலத்தைக் கடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை, ஜனாதிபதியின் உரையில் இருந்து உறுதியாகியிருக்கிறது.

ஜனாதிபதி தனது உரையில்- அதாவது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் கூறியிருந்த விடயம் இது. எனவே, ஜனாதிபதி வேறு, அரசாங்கம் வேறு என்ற வேறுபாடில்லாமல், புலிகளின் கொள்கையை தோற்கடிப்பதற்கான முயற்சி கடந்த மூன்று ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

அதுவும், சர்வதேச நாடுகளின் துணையுடன் இந்த முயற்சிகளை மேற்கொண்டும் அது முடியாமல் போயிருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜனாதிபதி.

மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் வழியிலேயே இந்த அரசாங்கமும் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை இதன்மூலம் புலனாகிறது.

மஹிந்த ராஜபக் ஷ போரில் தான் வெற்றி பெற்றார் . தமிழ் மக்களின் இதயங்களை வெற்றிபெறத் தவறி விட்டார் என்று கூறிய பலரும் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் தான், தோல்வியுற்ற மஹிந்தவின் வழியிலே தானும் சென்று பார்த்திருக்கிறது,

அதுவும் சர்வதேச ஆதரவுடன் விடுதலைப் புலிகளை எவ்வாறு மஹிந்த அரசாங்கம் தோற்கடித்ததோ, அதுபோலவே சர்வதேச ஆதரவுடன் புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்க இந்த அரசாங்கமும் முயன்று பார்த்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் உள்நாட்டில் இருக்காத போது, அவர்களின் கொள்கையை பலவீனப்படுத்தவோ அழிக்கவோ அரசாங்கம் ஏன் வெளிநாடுகளின் உதவியுடன் முயற்சிக்க வேண்டும்? அதற்கான எந்த தேவையும் இல்லையே?

ஆனாலும் அரசாங்கம் அத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது. காரணம், புலிகளின் கொள்கை முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டால், அது பலவீனப்படுத்தப்பட்டு விட்டால், உள்நாட்டில் தமிழர்களின் நிலை பலவீனமடையும்.

நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்குச் செல்லத் தேவையற்ற நிலை காணப்படும். தமிழர்களின் உரிமைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இன்னமும் புலிகளின் கொள்கையைத் தோற்கடிக்க முனைகிறது.

உள்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளையும் அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு ஈடுபாடு இல்லாத காரணத்தினால் தான், புலிகளின் கொள்கையைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு வெளிநாடுகளின் உதவிகள் வேறு.

மூன்று ஆண்டுகளை இப்படி வீணடித்த பின்னராவது, அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுகின்ற முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும்.

புலிகளின் கொள்கையைத் தோற்கடிப்பதற்கான தனது மூன்றாண்டு கால முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது என்பதை ஜனாதிபதி நேர்மையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதே நேர்மையை தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலும் அவர் சிரத்தையைக் காண்பித்தால், புலிகளின் கொள்கையைப் பலவீனப்படுத்துவதற்காக அவர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படாது.