முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை? கூட்டு எதிர்க்கட்சி

Report Print Jeslin Jeslin in அரசியல்

புலிகளை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்வதேச தரப்பிற்கு முன்வைத்த கருத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கின்றனரா என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி உடனடியாக வடமாகாண சபையை கலைத்து நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 9ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

வடக்கில் புலிகளை நினைவுகூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை நினைவுத்தூபி அமைத்தமை என்பன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியான நாட்டு மக்களுக்கு கூற வேண்டும்.

வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகவே ஜனாதிபதி உடனடியாக வடமாகாண சபையை கலைக்க வேண்டும்.

நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.