வடமாகாண அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் சட்டத்திற்கு முரணானது

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

அரசியலமைப்புக்கு முரணாக வடமாகாணசபையில் 6 அமைச்சர்கள் உள்ள நிலையில் அமைச்சர்கள் என்ற வகையில் ஞா.குணசீலன், க.சர்வேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் வழங்குவது சட்டத்திற்கு முரணானது என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவசாரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா பிரதம செயலாளருக்கு இன்றைய தினம் எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த வழக்கில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.

அந்த தடையுத்தரவில் பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதாக கூறியுள்ளது. மேலும் அந்த இடைக்கால தடையுத்தரவின் அடிப்படையில் நியமன அதிகாரி அரசியலமைப்பை மீறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் நேற்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் 6 பேர் அமைச்சர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று நடைபெற்ற வடமாகாணசபை அமர்வில் நான் விசேட கருத்து ஒன்றைக் கூறியிருந்தேன்.

அந்த கருத்தின் அடிப்படையில் வட மாகாணசபையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் அரசியலமைப்பின்படி அமைச்சர் சபையை மீள் நியமனம் செய்யும்படி கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் ஞா.குணசீலன், க.சர்வேஸ்வரன், க.சிவநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அமைச்சர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதும், அமைச்சர்களுக்கான வசதிகளை வழங்குவதும், அமைச்சர்களான அவர்களுடைய தனிப்பட்ட ஆளணிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதும் சட்ட முரணான செயற்பாடாகும், என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடிதம், வடமாகாண பிரதம செயலாளர், மத்திய கணக்காய்வாளர் நாயகம், பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.