செய்தி
செய்தி
சர்வாதிகார ஆட்சியுள் நுழையும் இலங்கை: கனடியத் தமிழர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:32.34 AM GMT +05:30 ]
இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு இலங்கையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பாக கனடியத் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர். போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் எந்தவொரு குழுவிற்கும் சாட்சியங்களை அளிப்பதற்குத் தான் தயாராக உள்ளதாக அறிவித்த பின்னர் பொன்சேகாவின் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “எந்தவொரு விசாரணைகளிற்குச் செல்லவும் சாட்சி வழங்கவும் நான் தயாராக உள்ளேன்… யாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருந்தால் அவர்கள் எவரையும் நான் காப்பாற்றப் போவதில்லை. யாரும் போர்குற்றம் புரிந்திருந்தால் அவர்களைப் பாதுகாப்பதானது தேசவிரோதமாகும்”

“சரத் பொன்சேகாவினது கைதானது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கமானது எவ்வகையான அடக்கு முறைகளையும் பிரயோகிக்கத் தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது,” இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இக்கைது நடவடிக்கையானது, இலங்கை எவ்வளவு விரைவாக பர்மா மற்றும் ஈரான் போன்று அடக்குமுறை அதிகாரமையமாக மாறுகின்றது என்பதனைக் காட்டுகிறது.

“சர்வதேச சமூகத்தினது மென்போக்கான இராஜதந்திர நடவடிக்கையானது இலங்கை அரசினது ஜனநாயகப் பண்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பின் மூலம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்துள்ளது” இவ்வாறு பூபாலபிள்ளை தெரிவித்தார். “இன்றைய இலங்கையானது, மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் கொலைப் பயமுறுத்தல்களை எதிர்நோக்குதல், காணாமல் போதல் அல்லது சிறைப்பிடிக்கப்படுதல் போன்றவை நடைபெறுகின்ற ஆர்வெலியன் போன்று உள்ளது. முனித உரிமைகள் எனும் விடயம் வரும் போது சதாம் உசைன் மற்றும் ஸ்லொபடோன் மெலோசவிக் போன்றவர்களின் வரிசையில் ராஜபக்சவும் சேருகின்றார்.

சர்வதேச சமூகமானது உண்மையில் இலங்கையில் ஜனநாயம், ஒற்றுமை மற்றும் மனிதஉரிமைகள் ஆகியவற்றைக் காண விரும்பினால், அவர்கள் மிக முக்கியமாக பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளையும் இலங்கை மீது விதிப்பதனைக் கருத்தில் எடுக்கவேண்டும். சிம்பாப்பே நட்டினை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் இருந்த வெளியேற்றியது போல் இலங்கையினையும் வெளியேற்றுவதற்குக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Copyright (c) 2008-09 TamilWin.com, All rights reserved.