சிறப்பாக இடம்பெற்ற பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய பால்குட பவனி

Report Print Kumar in மதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் மண்டலாபிசேக பூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும் 1008 சங்குகள் கொண்ட மகா சங்காபிசேகமும் நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் கும்பாபிசேகம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

அதனையொட்டி மண்டலாபிசேகம் 48 தினங்கள் நடைபெற்று வந்ததுடன் இன்று அதன் நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து மாபெரும் பால்குட பவனி சிறப்பாக நடைபெற்றது.

பால்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் மூல மூர்த்தியாகிய சிவசுப்ரமணியருக்கு பாலாபிசேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து 1008 சங்குகள் கொண்ட மகா சங்காபிசேகம் சிறப்பாக நடைபெற்றது. சங்குகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று விசேட யாகம் நடைபெற்ற பஞ்ச குண்டங்களிலும் யாகம் வளர்க்கப்பட்டு பிரதான கும்பங்களுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து கும்பங்கள் வெளிவீதி, உள்வீதி வலம் வந்து பிள்ளையார் மற்றும் மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் 1008 சங்குகளும் அபிசேகம் செய்யப்பட்டது.

அபிசேக ஆராதனைகளைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க விசேட பூஜைகளும் இடம்பெற்று, அதனையடுத்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.