வெகு சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்றம்

Report Print Kumar in மதம்

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிழக்கிலங்கையின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவை ஒருங்கே கொண்ட ஆலயமாகவும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கு சிறப்பு பெற்றதாகவும் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

பிதிர்கடன்களை செலுத்துவது ஆடி அமாவாசையில் சிறப்பு என இந்து ஆகமங்கள் கூறியுள்ள நிலையில் ஆடி அமாவாசையில் பிதிர்கடன் செலுத்துவதற்கு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொள்வது சிறப்பம்சமாகும்.

இராவணன் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டு வரும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ குருக்களின் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாகபூஜை, கும்பபூஜை, வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்றன.

பின்னர், கொடிச்சீலைக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று கொடிச்சீலை உள்வீதியுலா எடுத்து வரப்பட்டு எழுந்தருளி மூர்த்தியுடன் கொடித்தம்பம் அருகில் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொடிச்சீலைக்கு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடித்தம்பத்திற்கும் தம்ப விநாயகருக்கும் மூல மூர்த்திக்கும் பூஜைகள் நடைபெற்று அடியார்களின் அரோகரா கோசத்தோடு, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் பிற்பகல் மாலை திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை காலை இரதோற்சவமும், 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement