தமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி உண்மையில் யாருடையது?

Report Print Akkash in மதம்

தமிழர்கள் ஒரு ஆண்டில் மூன்று விழாக்களை முக்கியமாகக் கொண்டாடுகிறார்கள். பொங்கல், புத்தாண்டு, தீபாவளி ஆகியவையே அந்த மூன்று விழாக்கள் ஆகும்.

தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். உண்மையில் தீபாவளி யாருடைய விழா? தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. தமிழர்கள் கொண்டாடலாமா..?

வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாளாகும்.

வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள். தமிழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள்.

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான்.

அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்.

ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார்.

தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது.

உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார். உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.

உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”என்கிறான் நரகாசுரன்.

இராம – இராவண யுத்தம் ஆரிய – திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய Discovery of Indis என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறது. (ஆரண்ய காண்டம், 10வது சருக்கம்).

“தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது.

அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா என்றும் கூறப்படுகின்றது.

“தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் எழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தீபாவளி சமணசமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால தினமே தீபாவளியாகும்.

தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் – விளக்கு, ஆவலி – வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

“ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

மேலும் அவர் – “ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன் மதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்” (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60). ஆனாலும், தீபாவளியை கொண்டாடுவதற்கு எமது மூதாதையர்கள் சில விளக்கங்கள் தருகின்றனர்.