பூமியை உயிர்கள் வாழத் தகுதி அற்றதாக மாற்றவல்ல உறங்கும் அசுரர்கள்! மறைக்கப்பட்ட சூரியன்!!

Report Print Mawali Analan in விஞ்ஞானம்

வழமைப்போல எல்லாம் நடப்பதால், ஒருவேளை இது நடக்காது போனால் என்ன நடக்கும் என்பது பற்றிய சிந்திப்பு வருவதே இல்லை.

ஆனால் விபத்து என்ற ஒரு பதம் இருப்பதால் எதிர் பாராமல் நடந்து விட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி புத்திஜீவிகள் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்படியான ஓர் கேள்விதான் இது. சூரியன் உதிக்காது போனால் என்ன நடக்கும்? சூரியனின் ஒளி கிடைக்காது போனால் என்ன நடக்கும்?

முட்டாள் தனமான கேள்விகள் என நினைக்கக் கூடும். இது சாத்தியமற்றது எனவும் நினைக்கக் கூடும். அதனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறும் முன்னர் ஒரு விடயத்தினைப் பார்க்கலாம்.

1815ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள தம்போர (Tambora) என்ற எரிமலை வெடித்ததனால் ஏற்பட்ட தூசு காரணமாக சூரியன் மறைந்து போனது.

இதனால் சுமார் 40 கிலோ மீட்டர் உயரத்தில் தூசு மேகங்களைப்போன்று படர்ந்து சூரியனை மறைத்தது. இதனால் சூரியன் மிக மிக மங்களாக காட்சியளித்தது.

சூரியன் மறைக்கப்பட அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு கடும் குளிர்காலம் ஏற்பட்டது. அமெரிக்க கண்டமே பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டது. பல நாடுகளில் பஞ்சம் காரணமாக கலவரங்களும் ஏற்பட்டன.

அதேபோல் 1883ஆம் ஆண்டு மீண்டும் இந்தோனேசியாவில் கிரகாடோவ (Krakatoa) எனப்படும் எரிமலை வெடித்தது. இதனாலும் தூசு சூரியனை மறைத்தது. ஆனால் பாதிப்புகள் முன்பு போன்று இருக்கவில்லை.

மேலும் அதே நாட்டின் டோபா எனும் எரிமலையும் ஒரு முறை வெடித்து பூமிக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியது. இது போன்று சூரியன் மறைக்கப்பட்ட சம்பவங்கள் அனர்த்தங்கள் பலவற்றை பூமி கடந்து வந்தே உள்ளது.

இன்றும் பல எரிமலைகள் அசுரர்களைப் போன்று அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் எப்போது வெடிக்கும் என தெரியாது. அதனால் ஆய்வாளர்கள் இவற்றினை தொடர்ந்து அவதானித்தவாரு இருக்கின்றனர்.

அதனால் சூரிய மறைவு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒருமுறை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லாமல் இல்லை. இப்போது ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்வி சாதாரணமானதே என்பதனையும் ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா.

பூமி தன் அச்சில் சுழல்வதால் சூரிய உதயமும், மறைவும் ஏற்படுகின்றது. பூமி சுழல்வதை நிறுத்திக் கொண்டாலோ அல்லது பாரிய எரிமலைகள் வெடிப்பதனாலோ சூரிய மறைவு ஏற்படலாம்.

அப்படி நடந்தால் கடும் குளிர் ஏற்படும், பயிர்கள் தாவரங்கள் வளர்ச்சி இருக்காது, பட்டினியாலும், குளிராலும் மக்கள் செத்து மடிவர், புதுப்புது நோய்கள் உருவாகும்.

பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியமே இல்லாமலும் போய்விடும். மொத்தத்தில் பூமியில் உயிரினமே இல்லாது போய்விடும். இரவு பகல் மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களுமே அழிவடைந்து போகும்.

பின்னர் குளிர், சூரிய வெளிச்சம் அவசியமற்ற புதுப்புது உயிரினங்கள் உருவாகலாம். அதாவது புது பூமி உருவாகும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.