வெள்ளவத்தையில் வாழ்வோருக்கு ஆபத்தா? மக்கள் மத்தியில் அச்சம்

Report Print Ramya in பாதுகாப்பு

வெள்ளவத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய அனர்த்தம் கொழும்பு வாழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிக சன நெருக்கம் கொண்ட சவோய் திரையரங்குக்கு அருகாமையிலிருந்த பாரிய கட்டடமொன்று எதிர்பாராத வகையில் இடிந்து வீழ்ந்தது. இதன்காரணமாக வெள்ளவத்தை பகுதி எங்கும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இந்த அனர்த்தம் காரணமாக 25 பேர் வரையில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கட்டடத்தில் மேலும் எவரும் புதையுண்டுள்ளனரா என்பது தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில், வெள்ளவத்தையில் தொடர்மாடிக் கட்டடங்களை கொள்வனவு செய்துள்ள மற்றும் கொள்வனவு செய்யப்போகும் மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றாக வெள்ளவத்தை காணப்படுகிறது. அது மக்கள் அதிகளவில் வாழும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் அதிகரிப்புக்கு ஏற்ப கட்டடங்களின் அதிகரிப்பும் வானைத் தொடும் அளவுக்கு மாறியுள்ளது.

வெள்ளவத்தை பகுதியிலிருந்த சிறிய கட்டடங்கள் மாயமாக்கப்பட்டு மிக உயரமான பிரமாண்ட கட்டடங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் இன்று இடம்பெற்ற அனர்த்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான கட்டடங்களின் அதிகரிப்பினால் வெள்ளவத்தை பூமியில் மூழ்கிப் போகுமா என்பது பலரின் அச்சம் கலந்த கேள்வியாக மாறியுள்ளது.

இதற்கு பிரதான காரணம் வெள்ளவத்தை பகுதியில் காணப்படும் சதுப்பு நிலங்களே ஆகும். இன்று காலை உடைந்து வீழ்ந்த கட்டடம் அவ்வாறான சதுப்பு நிலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாபாரம் நோக்கம் காரணமாக எதிர்கால பாதுகாப்பு திட்டங்கள் அற்ற நிலையில், காணும் நிலங்கள் எங்கும் கட்டடங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

அரசாங்கம், சதுப்பு நிலப்பகுதிகளில் ஒரு சில வீடுகளை மாத்திரமே கட்டப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையிலும், இவ்வாறான கட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு தான் வருகின்றன.

குறித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் தொடர் மாடி வீடுகளே சிறந்தவை பாதுகாப்பு மிக்கவை என எம்மவர்கள் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்கின்றனர்.

இவ்வாறான நிலை ஏற்படுமாயின் எதிர்காலத்தில் பெருமளவானோரை இழக்க நேரிடுமோ என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் அவர்களின் உறவினர்களும் வெள்ளவத்தை பகுதியில் வீடுகளை கொள்வனவு செய்துள்ளனர். இதனால் வெள்ளவத்தையை குட்டி கனடா என பலர் விழித்துப் பேசுவது வழமை.

அவ்வாறு புகழ்பெற்ற வெள்ளவத்தை எதிர்காலத்தில் நிலக்கீழ் தரையிறக்குமா? சதுப்பு நிலங்களின் தாக்கம் காரணமாக எத்தனை கட்டடங்கள் இன்னும் பாதிக்கப்பட போகின்றன. இதன் காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்படுமா என்பது பலரின் மனங்களில் ஏற்பட்ட அச்சமாகும்.

இப்படியான நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அப்பகுதியில் உள்ள மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்? இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப் போவது யார்?

இன்று கட்டடம் உடைந்து வீழ்ந்த பகுதிக்கு பல அரசியல்வாதிகள் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

இது போன்று இன்னொரு அனர்த்தம் ஏற்படாத வகையில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

கட்டடங்கள் அமைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்னர், சரியான விதிமுறைகளின் படி தான் அவற்றை நிர்மாணிப்புப் பணிகளை மேற்கொள்கிறார்களா? பொருத்தமான இடத்தினை தெரிவு செய்திருக்கிறார்களா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

மக்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்களாக அதிகாரிகள் செயலாற்றுவார்களாயின் உயிர்ச் சேதங்களைத் தவிர்க்க முடியும்.

Comments