பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் விடுதலை?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுதலை செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இருந்த போதிலும், அவர்கள் இன்னமும் கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தேடப்படும் இரண்டு பிரதான சந்தேகநபர்களின் சரியான பெயர் விபரங்கள் கூட தெரியாத நிலையில் அவர்களை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து பேர்களில் பிள்ளையானும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமல் உள்ளமையினால் இந்த கொலை குற்றச்சாட்டில் இருந்து பிள்ளையான் விடுதலை செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்களின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.